முன்னுரை
உலகின் எந்த மொழி இலக்கியமானலும் அது தோன்றிய சமகாலநிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அது அமையும் எனலாம். ஆனால், நாம் இன்று அனுபவிக்கும்; எந்தவொரு நவீனக் கண்டுபிடிப்பும் தோன்றாத காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய பின்னனிகளையும், அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், அவர்களை வழிநடத்திய அரசர்களையும், அவர்கள் கால வரலாறுகளையும், இன்னபிற பதிவுகளையும் ஏடுகளில் அடுத்த தலைமுறையினருக்கு எழுத்து வடிவத்தில் எடுத்துச்செல்லும் அற்புதப் பணியில் ஈடுபட்ட நம் முன்னோர்களின் முயற்சி உண்மையில் வியந்து பாராட்டத்தகும். அந்த வகையில் தமிழுலகம் இதுவரை எத்தனையோ இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே வளர்த்து வந்துள்ளது. அவற்றில் தமிழுக்குக் கிடைத்த தூது என்னும் சிற்றிலக்கியம் அகவாழ்விலும் புறவாழ்விலும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணி தமிழிலக்கியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது என்பதை கற்றோர் யாவரும் அறிவோம். உ.வே.சாமிநாதையர் நூலகச்சுவடியில் பதிப்பாசிரியர் மு.சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா.நாகசாமி முயற்சியால் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது என்னும் நூலின் உட்கருத்துக்களை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூது பொருள் விளக்கம்
ஒருவர் தன்னுடைய கருத்தினை மற்றொருவருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்பதற்கு தன் நம்பிக்கைக்குரிய உயிரினத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு நபரின் வாயிலாகவோ ஒலிவடிவிலோ வரிவடிவிலோ பொருள்வடிவிலோ தெரிவிப்பதனை தூது எனலாம். தூது என்பது சொல்லியனுப்பப்படும் செய்தியையும் சென்று சேர்ப்பவனின் செயலையும் குறிக்கும். இச்செயலினைச் செய்பவன் ‘தூதன்’ எனப்படுவான். இந்நிலை உயர்திணை அஃறிணையாகிய இரண்டிற்கும் பொருந்தும்.
மகளிர் தம் மனங்கவர்ந்த மனாளனுக்கு தன்நிலையை தோழியின் வாயிலாகத் தூதாகச் சொல்லியனுப்பும் மரபு நம் தமிழ் சமுதாயத்தில் காலந்தோறும் இருந்து வந்துள்ளதனை இலக்கண இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. மேலும், பிரிவுக்காலங்களில் தலைவன் தலைவியின் மனமாற்றத்தினை நீக்குவதற்கு தோழி உள்ளிட்ட பலரும் தூதாக சென்றுள்ளனர். இவ்வாறு தலைவன் தலைவி பொருட்டு தூது செல்பவளை ‘தூதி’ என்பர். தலைவன் தலைவியின் காதல் பொருட்டு செல்லும் தூதினை ‘வாயில்’ என்னும் பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுவர். இதனையே,
“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” ( தொல்.பொருள்.கற்பியல்.52 )