ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender – in – Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry – Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,
“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ”
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3)