கவிதை: மீட்பர்

தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும் தொழில் நம்முடையதென மறந்து போனார்.எந்திர எச்சில் பெற எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.தடாலடியாக தேசம்…

Continue Reading →

நூல் அறிமுகம்: அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன.  இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார். ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார். நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.

அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.

Continue Reading →

தொல்காப்பியர் காட்டும் ஐந்திணைகளின் அமைப்பும் அவற்றின் எழிலும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பண்டைத் தமிழ் ஆன்றோரும், சான்றோரும் தம்வாழ்வியலை அகம், புறம் என இருவகைப் படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அகம் என்ற அகவாழ்வில் எழும் காதலன்பு, அன்பின் எழுச்சி, நெறியோடு சேர்ந்த வாழ்வின் தகைமை ஆகியவை இப்பகுதியிற் பேசப்படுவதைக் காணலாம். புறம் என்ற புறவாழ்வில் மேற்கொள்ளவேண்டிய முறைகள், ஆண்மை சார்ந்த பணிகள், போரியல் மரபு, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகள் ஆகியவை இப்புறத்திற் கூறப்படுவதைக் காண்கின்றோம். அகம் என்ற பகுதியை ஒருதலைக் காமம் என்றும், அன்புடைக் காமம் என்றும், பொருந்தாக் காமம் என்றும் மூன்று பகுதிகளாகக் காட்டுவர். இன்னும் இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் தொல்காப்பியர்  (கி.மு.711) ஏழு (07) திணைகளை எடுத்துக் காட்டுவர்.

‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’  – (பொருள். 01)

மேற்கூறப்பட்ட ஏழு திணைகளுள், நடுவென்று கூறப்பட்ட பாலைத்திணை ஒழியக், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவாகி நின்ற ஐந்திணைகளும், கடல்சூழ்ந்த உலகம் பகுக்கப் பட்டிருக்கும் இயல்பாகும்.

‘அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.’ –  (பொருள். 02)

மேற்காட்டிய ‘நடுவண் ஐந்திணை’ – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.

பெரியோரின் செய்யுளை ஆராய்ந்தால், முதற்பொருள் எனவும், கருப்பொருள் எனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட மூன்று பொருள்களுமே காணப்பெறும் என்று தொல்காப்பியர் சூத்திரம் கூறும்.

‘முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.’ – (பொருள். 03)

Continue Reading →

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் – 8!

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.…

Continue Reading →

எஸ்.பொ. நினைவுகள்……

(எஸ்.பொ. 26-11-2014 இல் மறைந்த வேளையில் நான்கு அங்கங்களில் எழுதிய தொடரின்  இறுதிப்பகுதி)

எஸ்.பொ

அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை – இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 – 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன –  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   – எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர். தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி ஆ. கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி,  ஆன்மீகம், சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம். மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன் YWCA மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   –  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை, இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து –  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,  சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி, எஸ்.பொ.  – மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை, நாட்டுக்கூத்து   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.

நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  ஆ.சி. கந்தராஜா   தலைமை வகித்தார். மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில்   கலந்துகொண்டு   கௌரவம்  பெற்ற  எஸ்.பொ. அவர்களைப்பற்றிய  சிறப்புரையை  மெல்பனில்  தமிழ்  ஆசிரியராக பணியாற்றும்   இலக்கிய  ஆர்வலர்  திரு. சிவசம்பு  நிகழ்த்தினார்.

மறுநாள்   நவம்பர்  16   ஆம்   திகதி  மெல்பனில் Clarinda  என்னும் இடத்தில்   நடந்த  உதயம்  மாத  இதழ்  நடத்திய  கருத்தரங்கில் பொன்னுத்துரையும்   உரையாற்றினார்.  பொன்னுத்துரைக்கு  உதயம் இதழின்    கருத்துக்கள்   சிலவற்றில்   உடன்பாடுகள் இல்லாதிருந்தமைக்கு  காரணங்கள்   பல  இருந்தாலும்,   உதயம் ஆசிரியர்  டொக்டர்  நடேசனிடத்தில்  அன்பு  பாராட்டினார்.  நடேசனின்  சில  நூல்களையும்  அவர்  செம்மைப்படுத்தி  தமது  மித்ர பதிப்பக   வெளியீடாக  வெளியிட்டார். அவற்றுள்  ஒரு  சிலவற்றுக்கு  பொன்னுத்துரையே  பெயரும்  இட்டார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.  வாழும்  சுவடுகள்  (இரண்டு பாகங்கள்)   வண்ணாத்திக்குளம்,   உனையே  மயல்கொண்டு  (நாவல்கள்) இந்த   இரண்டு    நாவல்களையும் – பின்னர்    ஆங்கிலத்தில் ( Butterfly Lake  —  Lost in You)   கொழும்பில்  பிரபல்யமான  நூல் பதிப்பு நிறுவனம்  விஜித்த   யாப்பா  வெளியிட்டது.

Continue Reading →