உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் – 8!

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.…

Continue Reading →

எஸ்.பொ. நினைவுகள்……

(எஸ்.பொ. 26-11-2014 இல் மறைந்த வேளையில் நான்கு அங்கங்களில் எழுதிய தொடரின்  இறுதிப்பகுதி)

எஸ்.பொ

அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை – இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 – 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன –  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   – எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர். தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி ஆ. கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி,  ஆன்மீகம், சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம். மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன் YWCA மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   –  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை, இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து –  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,  சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி, எஸ்.பொ.  – மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை, நாட்டுக்கூத்து   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.

நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  ஆ.சி. கந்தராஜா   தலைமை வகித்தார். மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில்   கலந்துகொண்டு   கௌரவம்  பெற்ற  எஸ்.பொ. அவர்களைப்பற்றிய  சிறப்புரையை  மெல்பனில்  தமிழ்  ஆசிரியராக பணியாற்றும்   இலக்கிய  ஆர்வலர்  திரு. சிவசம்பு  நிகழ்த்தினார்.

மறுநாள்   நவம்பர்  16   ஆம்   திகதி  மெல்பனில் Clarinda  என்னும் இடத்தில்   நடந்த  உதயம்  மாத  இதழ்  நடத்திய  கருத்தரங்கில் பொன்னுத்துரையும்   உரையாற்றினார்.  பொன்னுத்துரைக்கு  உதயம் இதழின்    கருத்துக்கள்   சிலவற்றில்   உடன்பாடுகள் இல்லாதிருந்தமைக்கு  காரணங்கள்   பல  இருந்தாலும்,   உதயம் ஆசிரியர்  டொக்டர்  நடேசனிடத்தில்  அன்பு  பாராட்டினார்.  நடேசனின்  சில  நூல்களையும்  அவர்  செம்மைப்படுத்தி  தமது  மித்ர பதிப்பக   வெளியீடாக  வெளியிட்டார். அவற்றுள்  ஒரு  சிலவற்றுக்கு  பொன்னுத்துரையே  பெயரும்  இட்டார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.  வாழும்  சுவடுகள்  (இரண்டு பாகங்கள்)   வண்ணாத்திக்குளம்,   உனையே  மயல்கொண்டு  (நாவல்கள்) இந்த   இரண்டு    நாவல்களையும் – பின்னர்    ஆங்கிலத்தில் ( Butterfly Lake  —  Lost in You)   கொழும்பில்  பிரபல்யமான  நூல் பதிப்பு நிறுவனம்  விஜித்த   யாப்பா  வெளியிட்டது.

Continue Reading →

முகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

- தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா -பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.

2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa’s Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.

3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.

4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

Continue Reading →

அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ. நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது

சோ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.”  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.

” உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா…? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்” என்றார் சிவாஜி. ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ். அதன் பெயர் துக்ளக்.

நடிகராகவும்  வழக்கறிஞராகவும்  இயங்கிக் கொண்டே   வெற்றிகரமாக பத்திரிகையும்  நடத்திய  அவர்தான் நேற்று  சென்னையில் தமது 82 வயதில் மறைந்த சோ. ராமசாமி. துக்ளக் என்ற மன்னர் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இன்று இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் புதிய நாணயத்தாள் விவகாரம் பற்றி  அறிவோம். இந்தியாவில்  விலங்குகளுக்கென மருத்துவமனை அமைத்த முன்னோடியாக அசோக மன்னன் விளங்குவது போன்று, மன்னர் கியாஸ்தின் துக்ளக்கின் மறைவிற்குப்பிறகு,  கி.பி. 1325 இல் பதவி ஏற்ற  முகம்மது பின் துக்ளக்தான் இந்தியாவில் நாணயத்தாளை அறிமுகப்படுத்திய  முன்னோடி. . கிறுக்குத்தனமாக  முடிவுகளை எடுக்கும்  மன்னர்  என்றே முகம்மது பின் துக்ளக்கை வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆயினும், துக்ளக் –  கணித சாஸ்திரம், தத்துவம், வானவியல், இயற்பியல்   முதலான துறைகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருந்தவர். துக்ளக் சோ  அவர்களும் பல்துறை ஆற்றல் மிக்கவர். அவர் ஒரு நடிகராகவும் வழக்கறிஞராகவும்  மாத்திரம்  இருந்திருப்பாரேயானால்  இவ்வளவு  தூரம் பிரபல்யம்  அடைந்திருக்கமாட்டார். சில  அரசியல்  தலைவர்களுக்கும்  ஆலோசகராக  விளங்கியர்  சோ.

Continue Reading →

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.

இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. முயற்சி திருவினையாக்கும் (பக்கம் 19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்;க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது. அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.

Continue Reading →

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்முன்னுரை
கவிஞர் சிற்பியின் சிந்தனைகள் பரந்த அனுபவமும் மனித வாழ்க்கை குறித்த காலத்திற்கேற்ற மதிப்பீடுகளும் கொண்டவை. தனிமனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் போக்கில் அவருடைய கவிதைகள் அமைந்துள்ளன. இவை சமூகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகள், வரலாறுகள், மரபுகள், தொன்மங்கள், சமயம், சமயமறுப்பு, அரசியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால சமூக நலனுக்கும் ஒரு தீர்வு சொல்கின்ற வகையில் அமைந்துள்ளன. அவருடைய கவிதைகளில் அவர் சார்ந்திருந்த சில இயங்கங்களின் செயல்பாடுகளும், கொள்கைகளும், தத்துவங்களும் எதிரொலிக்கின்றன. இவ்வகையில் அவ்வியக்கம் சார்;ந்து, இவர் கவிதைகளை ஆராய்வது இங்கு பொருத்தமுடையதாகிறது.

தத்துவம் – விளக்கம்
“தத்துவம் என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மீக வாதிகளால் பிரம்மத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் – இறைவன், துவம் – நீ, ஆசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது”1 மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவண தத்துவனே என்ற பிரமத்தைச் சுட்ட தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்”.2

பழங்காலத்தில் ‘மெய்’ என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று, உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான ‘மெய்ப்பொருளியல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.
மேலும் ‘Philosophy’ என்னும் ஆங்கிலச் சொல் ‘பிலாஸ்’, ‘சோமியா’ என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன் தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்படும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது”3.

‘Philosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’ என்பது இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.

Continue Reading →

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!

கடந்த சில மாதங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் விரைவில் பூரண குணம் பெற்று வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் மாரடைப்பினால் அவர் மறைந்த…

Continue Reading →

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து இலங்கை (கிழக்கு மாகாணம்) நடத்திய சர்வதேச “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள்” சர்வதேச பயிற்சிப்பட்டறை!

[அண்மையில் இலங்கையில் உத்தமம் அமைப்பு சார்பாக இலங்கையில் அதன் செயற்குழு உறுப்பினர் திரு.சரவணபவானந்தன் அவர்களின் முன்னெடுப்புகளால் இரண்டுநாள் பயிலரங்கம் 8,9-நவம்பர் 2016   நடைபெற்றது. அதன் நிகழ்வுகளைப் பற்றிய விபரங்களை முனைவர் துரை மணிகண்டன் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். – பதிவுகள் -]

8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள் திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கவிழா 8-11-2016 காலை 9 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில்  உத்தமம் உறுப்பினரும், கிழக்குக் கல்வி அமைச்சரின் இணைப்பாலருமான வ. கலைச்செல்வன்  வரவேற்புரை வழங்கினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினை அதிகமாகப் பயன்படுத்துவதோடு அதேசமயம் அந்த விடயத்தை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.  மேலும் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, தாய்மொழியின் ஊடாக இணையத்தில் அதிகமான தொழில்நுட்ப அறிவையும், தமிழில் இருக்கின்ற இலக்கிய ஆக்கங்களையும் பெற்று புதிய நோக்கில் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது பேருதவி புரியும் என்றார். இணையத்தில்  தமிழ்மொழியை வளர்ப்பதன் மூலம் உலக மொழிகளில் தமிழையும் ஒரு சிறந்த இட்த்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என கருத்துரைத்தார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: நெய்தல் நிலத்துக் கவிதைகள் – மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை.

நெய்தல் நிலத்துக் கவிதைகள்: மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை. மு.புஷ்பராஜன்போர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.

மு.புஷ்பராஜன் நாடுகள் கடந்த கவிஞர், விமர்சகர், ஆய்வாளர். அத்துடன் கலை, இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் இயங்குபவர். இவரது நூல்களாக ‘அம்பா’ என்ற மீனவர் பாடல்களின் தொகுப்பும் ‘வாழ்புலம் இழந்த துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பொன்றும் இதுவரை வெளிவந்துள்ளது. ஈழத்தில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தாலும் ஈழ இலக்கிய உலகில் பலத்த அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஈழம், தமிழகம், புகலிடம் என்ற முக்கோணத் தளப் பரப்பில் உயிர்ப்புடன் இயங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.  இது இவரது முதலாவது கவிதைத்தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று பல நூறு கவிஞர்களால் இயங்குகின்ற நவீன தமிழ் கவிதை உலகில் மு.புஷ்பராஜன் அவர்கள்  முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகிறார். இதற்கு இவரது இந்த மரபு குறித்த அறிதலும்  புரிதலுமே  முக்கிய காரணமாக விளங்குகின்றது. நவீன தமிழ் கவிதை மரபானது 150 வருடங்களுக்குள் மட்டுமே உட்பட்ட மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டதாக இருப்பினும் இது  உலக அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு, இம்மரபானது தன்னகத்தே ஒரு மூவாயிரம் வருட பழமையும் செழுமையும் வாய்ந்த ஒரு கவித்துவ பாரம்பரியத்தையும் மரபையும் கொண்டிருப்பதே ஒரு முக்கிய காரணமாகும். இம்மரபு குறித்த புரிதலும் அறிதலும் கொண்டவர்களே ஒரு சிறந்த கவிஞராக இருக்க முடியும் என்பது இன்று நிதர்சனமான உண்மையாகிவிட்டது. இதனால்தான் என்னவோ எந்தவிதமான மரபு சார்ந்த அறிவோ எண்ணங்களோ  இன்றி மேலைத்தேய சிந்தனையில் மட்டும் தடம் புரண்டு எழுதும் இன்றைய பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளை படிமங்கள் என்னும் பம்மத்துக்களால் மட்டும் காட்சிப் படுத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும்  கரடு முரடான காட்சிப் படிமங்களின்றி மிக எளிமையானதும் சிக்கல்கள் இல்லாததுமான  சொற்களால் மட்டுமே இக்கவிதைத் தொகுதி நிரம்பியிருக்கின்றது.

Continue Reading →