2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.
ஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது. பெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச் சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும். பாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது. புனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது. எனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.