வாசிப்புக்குச் சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…

வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…தேவகாந்தன்2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.

ஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது. பெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச்  சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும். பாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது. புனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி  நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது. எனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.

Continue Reading →

நிகழ்வுகள்: ‘மகரந்தச் சிதறல்’ நூல் ஒரு வரலாற்று ஆவணம்! ஈலிங் நூல் நிலையத்தில் சிறப்பு அறிமுக உரை!

நவஜோதி யோகரட்னம்‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று  விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.

ஈலிங் நூல் நிலையத்தைச் சார்ந்த திருமதி சாந்தி அகிலன் ஒழுங்கு செய்திருந்த ‘மகரந்தச் சிதறல்’  நூல் அறிமுகக் கூட்டத்தில் மு. நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: ‘லண்டனில் வாழும் 33 பெண் ஆளுமைகளின் தேர்ந்த நேர்காணல்களின் தொகுப்பாக இந்த நூல் சிறப்புப் பெறுகின்றது. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் இசைப் புலமை சார்ந்த தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா போன்றவர்களின் நேர்காணல்கள் அவர்கள் இருவரின் மறைவின் பின் கூடிய அர்த்தம், முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. இசை, நாட்டியம் போன்ற துறைகளில் நேர்காணல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ள 12 பெண் ஆளுமைகளின் பல்வேறுபட்ட குடும்பப் பின்னணி, இசை நாட்டியப் பின்புலம், வௌtவேறுபட்ட சமயப் பின்னணிகள், செழுமை மிக்க இசை நாட்டிய வல்லுநர்களிடம் பயின்றமை போன்ற வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 243 : எழுத்தாளர் அருண்மொழிவர்மனுடன் சில மணித்துளிகள்…….

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்இன்று மாலை (ஜூன் 29, 2017) எழுத்தாளரும், புதிய சொல் ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவரும், இணையச் சுவடிகள் காப்பகத் தளமான ‘நூலகம்’ தளத்திட்டத்தின் பங்காளர்களிலொருவருமான அருண்மொழிவர்மனுடன் சுமார் இரு மணித்தியாலங்கள் வரையில் , பிரிம்லி மற்றும் லோரன்ஸ் வீதிச்சந்திப்பிலுள்ள ‘டிம் கோர்ட்ட’னில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மறைந்திருக்கும் ஈழத்தவர்களின் படைப்புகளையெல்லாம் இணையத்தில் ஆவணப்படுத்தி வரும் ‘நூலகம்’ தளம் பற்றி, நூல் வெளியீடுகள் பற்றி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவாக நூல்கள், ஓலைச்சுவடிகள், கலை, இலக்கிய ஆளுமைகளின் இறுதிக்காலக் கையெழுத்துக் குறிப்புகள், ஆக்கங்கள் போன்றவையெல்லாம் ஆவணப்படுத்தும் பணியினைச் செய்துவரும் இணையச் சுவடிகள் அமைப்பான ‘நூலகம்’ தளத்தின் முக்கியத்துவம் பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது.

நூலகம் தளத்தின் சுவடிகளை ஆவணப்படுத்தும் திட்டம் பற்றி, அதனை எவ்விதம் செய்வது பற்றி, இதற்காக இலங்கையில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளைப்பற்றி இவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார். நூலகம் தளத்தின் முக்கியமான ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் இவ்வோலைச்சுவடிகளை ஆவணப்படுத்தலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க செயற்பாடு.

Continue Reading →

‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட்’டின் ‘யுகதர்மம்’ நூல் வெளியீடு!

– யூலை 9, 2017 அன்று ‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும்…

Continue Reading →