ஐரோப்பியப்பயணத்தொடர் (3) : பிரயாண முஸ்தீபுகள்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் மூன்றாவது  அத்தியாயம் ‘பிரயாண முஸ்தீபுகள் ‘ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


“முன்கூட்டியே மனக்கலக்கம் அடைவதே முன்கூட்டியே யோசிப்பதும் திட்டம் வகுப்பதுமாக மாறும்” –  வின்ஸ்டன் சர்ச்சில் [ ” Let our advance worrying become advance thinking and planning. ”  –  Winston Churchill ]

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்என் வாழ்வின் மிகப்பெரிய வரப்பிரசாதங்கள் என்றால் என்றும்  நான் முன்வைப்பது என் குடும்பம் மற்றும் என் தொழில். அதிலும் என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம் என் தோழிகள் மற்றும் என் காலகட்டத்தில் என்னுடன் இருந்த எத்தனையோ பெண்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய சிறகுகளை விரித்து சுதந்திரமாக வானவீதியில் பயமின்றிப் பறக்க வழிவகை செய்தவர்கள் அவர்களே. என் அப்பாவின் பயண ஆசையின் வெளிப்பாட்டின் விளைவுதான் நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது புது நாடு செல்லும் பயணங்களின் மூலகாரணம். ஆனால் என் அம்மாவிற்கும் எனது கணவருக்கும் பிரயாணம் செய்வது என்பது விருப்பம் அதிகம் இல்லாத நிகழ்வு. தேவைப்பட்டால் மட்டுமே பயணம் செய்வார்கள். சுற்றுப்பிரயாணம் செய்வதில் அதிக நாட்டம் இல்லாதவர்கள். இந்தக் குணாதிசயத்தில் என் அப்பாவுக்கும் எனக்கும் அவர்கள் வேறுபடுவார்கள். அப்படியே பிரயாணம் மேற்கொண்டாலும் வீட்டுக்கு எப்போது திரும்புவோம் என்ற நினைப்புதான் அதிகம் இருக்கும். ஆனால்  என் அப்பாவின் ‘பாஸ்போர்ட்’ மூன்று புத்தகங்கள் பல நாடுகள் சென்று வந்த காரணத்தால்  பக்கங்கள் முழுதும் ‘ஸ்டாம்ப்’களால் நிரம்பி வழியும். இப்போதும் பயணம் செய்வதில் அவரது ஆர்வம் எள்ளளவும் குறையவில்லை. ஜனவரி மாத வாக்கில் என்னிடம் இந்தக் கோடை விடுமுறைக்கு ஏதாவது நாடு பக்கத்தில் சென்று வரலாம் என்று ஆலோசனை கேட்டார். அதே சமயம்தான் என் ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் செல்ல திட்டம் வகுத்ததும் சேர்ந்தது. ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க முடிவு செய்த காரியம் என் கனவு தேசங்களுக்கு செல்ல வழிவகுத்தது என்பதும் விதியின் ஒரு வினை என்றால் மிகையாகாது.

Club7 holidays அனுப்பிய மின்னஞ்சல் இணைப்பில் பல்வேறு விதப் பயணத்திட்டங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த பயணங்களுக்காகச் செலுத்த வேண்டிய தொகையும் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் முதல் பயணத்திட்டமாக பதினைந்து நாட்கள்  ஒன்பது நாடுகளுக்குப் பயணம் செய்யும் குறிப்பு எனக்கு மிகுந்த ஆசையை உருவாக்கியது. லண்டனில் ஆரம்பித்து பாரிஸ் நகரம் சென்று, பின் பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், ஜெர்மனி வழியாக ஸ்விட்ஸ்ர்லாண்ட் சென்று மூன்று நாட்கள் அங்கே கழித்து, அதன் பின் ஆஸ்ட்ரியா நாட்டுக்குள் கால் பதித்து பின் இத்தாலி,  வாடிகன் சிட்டி மற்றும் ரோம் நகரத்தில் முற்றுப்பெறும் இந்த பிரயாணக் குறிப்பு மிகவும் கவர்ந்தது. இதற்கான தொகை ஒருவருக்க்ச் சுமார் 2  லட்சத்து 40 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. என் அப்பாவிடம் இந்தத் திட்டம் பற்றி கூறியபோது இதற்காகத் தொகை அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற தயக்கம் அவருள் இருந்தது. எனக்கும் இது பற்றி ஒரு முடிவு செய்ய அந்தச் சமயம் இயலவில்லை.

Continue Reading →