பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .
முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச் சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.
எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
” பார்க்கற பார்வை…சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக…”
” நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா…”
” இங்க இருக்கறவங்களெ விட அழகுதா…”
” செரி… செரி… பேரழகியா நெனச்சக்காதே”