அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றன. இலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (குடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் அண்மையில் யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்திலும் ( யாழ். கச்சேரி) முல்லைத்தீவில் விசுவமடுவிலும் வவுனியா வேப்பங்குளத்திலும் நடைபெற்றன. இவற்றில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள் அ. சதானந்தவேல், முருகபூபதி ஆகியோரும் வருகை தந்து உரையாற்றினர். வன்னியில் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது.
நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவிபெற்ற வவுனியா மாவட்ட மாணவி செல்வி கிருஷ்ணவேணி சுப்பையா தற்பொழுது தமது கல்வியை நிறைவுசெய்து பட்டதாரியாகி, வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரும் அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றினார்.