அண்மையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் முன்பொருமுறை அமரர்களான சோவுக்கும், கவிஞர் சுரதாவுக்குமிடையில் கவிதை பற்றி நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களைக் குறிப்பிட்டு, கவிஞர் சுரதா சோவின் கவிதை பற்றிய கூற்றுக்கெதிராக எழுதிய கவிதையினையும் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?’ சுரதா எழுதிய கவிதையின் இடையில்
“ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? “
என்று குறிப்பிட்டிருப்பார்.
அது பற்றிய என் கருத்தினைப் பின்வருமாறு முன் வைத்திருந்தேன்.அதற்கு கவிக்கோ ஞானச்செல்வன் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
கிரிதரன் நவரத்தினம்: “ஆசிரியப்பாவில் எதுகை, மோனை அவசியமில்லை. இயல்பாக இருந்தால் நல்லது, ஆனால் அவசியமில்லை. ஆசிரியப்பாவில் முக்கியமானது பாவிக்கப்படும் சீர்களும் (பெரும்பாலும் தேமா, புளிமா போன்ற ஈரசைச்சீர்களாக இருக்க வேண்டும்) . தளைகளும் (பெரும்பான்மையாக நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் வரவேண்டும் ஆனால் வஞ்சிச்சீர்கள் வரவே கூடாது). எதற்காகக் கவிஞர் சுரதா ‘ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை ஊனமுண்டா? என்று கேட்கின்றார் இங்கே?”