ஆய்வு: கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடுகள் (நான்காம் நிலை)

- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் யாத்த நூல்  தொல்காப்பியம். தமிழ்மொழியின் காலத்தொன்மை பண்பாடு, நாகரிகச் சிறப்பு முதலியவற்றை நுவலும் முதன்மை ஆதாரமாக இந்நூல் திகழ்கிறது. உலகில் தோன்றிய இனங்களில் பொருளுக்கு இலக்கணம் வகுத்தது தமிழினமாகும். ஏனைய மொழிகள் யாவும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்டுள்ள நிலையில் தமிழ்மொழி, பொருளை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் வரையறுத்து வாழ்வை நெறிப்படுத்தியது. இவ்வகவாழ்வு களவு, கற்பு என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இக்களவுக்கால மெய்ப்பாடுகளுள்  ஒன்றான நான்காம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளைக் கலித்தொகையில் பொருத்திப் பார்ப்பதாகக் இக்கட்டுரை அமைகின்றது.

மெய்ப்பாடு
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடே மெய்ப்பாடு ஆகும். இளம்பூரணர், “மெய்ப்பாடென்பது புலன் உணர்வின் வெளிப்பாடு. அது மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று” என்பர்.

அகத்திணை  மெய்ப்பாடுகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப    ”      (தொல்.பொருள்.அகத்.நூ.1)

என்றவாறு, அகத்திணைகளைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று மூன்றாகப் பகுப்பது தமிழ் மரபு. கைக்கிளை என்பது ஒரு தலை வேட்கை பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; ஆதலின் ஒத்த அன்புடைய ஐந்திணையே சிறந்தது என்பதால் இதனை நடுவணைந் திணைக்குள் அடக்குகிறார் தொல்காப்பியர். அகவாழ்வில் களவு, கற்பு என்ற இருநிலைகள் உள்ளன. களவுக் காலத்திற்கு உரியனவாக 24 மெய்ப்பாடுகளையும், கற்புக் காலத்திற்கு உரியனவாக 10 மெய்ப்பாடுகளையும்  தொல்காப்பியர் பாகுபடுத்தியுள்ளார்.

களவுக்கால மெய்ப்பாடுகள்
நல்லூழின் ஆணையால் காதலர் இருவர் தம்முள் கண்ட காட்சி, வேட்கை, இருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையே  போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்தாகப் பகுப்பது மரபு. இவற்றை வடநூலார் அவத்தை என்பர். இவற்றில் முதல் ஆறு உணர்வு நிலைகள் மட்டும் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு  நிலைகளுள் முதல் மூன்று நிலைகள் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும், அடுத்த மூன்று நிலைகள் புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

Continue Reading →

கவிதை: முடிவில்லாக் காலங்களின் இருள்

- துவாரகன் -

நீண்ட கோடாக இருள்.
வலிய காந்த இழுப்பில்
ஒட்டிக்கொள்ளும்
துருப்பிடித்த இரும்புத் துகள்களாக.

திருகிப் பூட்டப்பட்ட தண்ணீர்க் குழாயிலிருந்து
ஓரிடைவெளியில்
விட்டுவிட்டுச் சொட்டிக்கொண்டிருகிறது வாழ்வு.
அங்கு எல்லையற்ற
பாலைவெளியாக நீள்கிறது இருள்.

Continue Reading →