– அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகம் ‘எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது –
விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. ‘கூத்தாட்டவைக் குழாத்தற்றே” என்றார் வள்ளுவர்.
சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். “பாட்டிடையிட்ட உரைநடையாக” காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.
இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் – கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 – 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.