பூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.
இதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
இனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
நேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர், ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.