– ‘மல்லிகை’ ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு ஜூன் 27 அன்று வயது தொண்ணூறு. அதனையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரை வெளியாகின்றது. –
நான் அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது. அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள். எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன் வள்ளுவர் இல்லத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின் மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும் நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள். அன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார். அப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை. அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது. அதனைத்தான் பின்னாட்களில் தர்மாவேசம் எனப்புரிந்துகொண்டேன். அவருக்கு எமது தமிழ் சமூகத்திடம் ஏதோ கோபம், ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவே அந்த வயதில் தெரிந்துகொண்டேன். சங்கானை என்னும் இடத்தில் நடந்த சாதிக்கலவரம் பற்றி அவர் பேசினார். சாதி என்றால் என்னவென்று தெரியாமல்தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். விடுதியில்தான் அதன் அர்த்தம் எனக்கும் முருகானந்தனுக்கும் தெரிந்தது.
டொமினிக்ஜீவா, அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றியும் பேசினார். அவர், ஒரு விறகுவெட்டிப்பிழைக்கும் தொழிலாளியின் மகன் என்ற தகவலும், தெருவிலிருந்த மின்கம்பத்தின் கீழே அமர்ந்து படித்திருக்கிறார் என்ற செய்தியும் டொமினிக்ஜீவா அன்று சொல்லித்தான் எனக்குத் தெரியும். டொமினிக்ஜீவா அன்று பேசும்போது அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. பேசி முடித்த பின்னர் அவருக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப்போத்தலை எடுத்து அருந்தினார். மிச்சமும் வைத்தார். அதனை அருந்துவதற்கு இரண்டு மாணவர்கள் போட்டியிட்டனர். அதுதான் நான் டொமினிக்ஜீவாவை முதல் முதலில் கண்ட காட்சி. அவரை பின்னாட்களில் சந்திப்பேன் என்றோ, அவர் வெளியிட்ட மல்லிகையில்தான் எனது முதலாவது இலக்கியப்பிரதி வெளியாகும் என்றோ, அவர் எனது குடும்ப நண்பராவார் என்றோ, அவர் பற்றி கட்டுரைகளும் நூலும் எதிர்காலத்தில் எழுதுவேனென்றோ அந்தச் சிறிய வயதில் நான் கனவுகூட காணவில்லை. ஆனால், நான் அன்று காணாத கனவெல்லாம் பிற்காலத்தில் கனவாக வந்து நனவாகியிருக்கின்றன. அவருடன் நெருங்கிய பின்னர். அவரும் என்னுள் கனவுகளை விதைத்தார். அவற்றை நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன், தமது 90 ஆவது அகவைக்கு வந்திருக்கும் அவரை வாழ்த்துகின்றேன்.
Continue Reading →