அஞ்சலி: திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள் – இலங்கைத் திரைப்பட உலகை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞன்! தமிழ்ப்பேசும் மக்களின் கனவுகளை ஆவணமாக்கிய மனிதநேயரையும் இழந்துவிட்டோம்!

திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள்இலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர்  திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன! அண்மையில்தான் அவருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தமிழ்ப்பிரதேசத்திலிருந்தே விருது பெற்றுக்கொண்டு விடைபெற்றுவிட்டார் என்பதை அறியும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தர்மசேன பத்திராஜ தமிழ்ப்பேசும் மக்களின் உற்ற நண்பர். தமிழ் கலா ரசிகர்களினால் போற்றப்பட்டவர். இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குநர். தரமான சிங்களப்படங்களையும் குறும்படங்கள் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றையும் இயக்கியவர். பழகுதற்கு இனியவர். எளிமையானவர்.  சிறுபான்மை இனமக்களிடம் அளவுகடந்து நேசம் பாராட்டியவர். விசால மனம்படைத்த மனித உரிமை செயற்பாட்டாளர். எல்லாவற்றுக்கும் அப்பால் மனித நேயக்கலைஞர். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானவர்.

அவரை நான் முதல் முதலில் சந்தித்ததும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பகல்பொழுதில்தான். அதனால் அந்த முதல் சந்திப்பும் மறக்கமுடியாதது. யாழ்ப்பாணத்தில் தயாராகிக்கொண்டிருந்த எழுத்தாளர் காவலூர் ராசதுரையின் பொன்மணி படப்பிடிப்பு வேலைகளுக்காக தர்மசேன பத்திராஜாவும் அவரது ஒளி – ஒலிப்பதிவாளர் மற்றும் சிலரும் அன்றைய தினம் மதியம் காங்கேசன் துறை நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தார்கள். அன்றைய சந்திப்பு எதிர்பாராதது. எனினும் – அவரை அதன்பின்னர் சந்திப்பதற்கு  காலம் கடந்து நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. பொன்மணியில் திருமதி சர்வமங்களம் கைலாசபதி – டொக்டர் நந்தி – பொறியிலாளர் திருநாவுக்கரசு – ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா – கலைஞர் சோக்கல்லோ சண்முகம் – மௌனகுரு – சித்திரலோக தம்பதியர் – பவாணி திருநாவுக்கரசு – திருமதி காவலூர் ராசதுரை உட்பட பலர் நடித்தனர். கதாநாயகியாக திரைப்பட நடிககை சுபாஷினி நடித்தார். பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் பாடல்கள் இயற்றினார். காவலூர் ராசதுரையின் மைத்துனர் தயாரித்திருந்தாலும் பொன்மணியின் கதை – வசனம் நிருவாகத்தயாரிப்பு முதலான பொறுப்புகள் அனைத்தையும் சுமந்தவர் காவலூர்.

Continue Reading →