அஞ்சலி: கலாநிதி தர்மசேனா பத்திராஜா ( Dr.Dharmasena Pathiraja)

கலாநிதி தர்மசேன பத்திராஜா

பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி’ புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய ‘பொன்மணி’ என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் ‘கோல்டன் லயன்’ விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள் (1-3)

- வ.ந.கிரிதரன் -காலத்தால் அழியாத கானங்கள் 1: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

“நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?”

தமிழர்களின் கவிதை வரலாறானது சங்கப்பாடல்களில் தொடங்கி இன்றைய தமிழ்ச்சினிமா மெல்லிசைப்பாடல்களையும் உள்ளடக்கியதொன்றுதான் என்பதை இன்று கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் , திறனாய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளத்தொடங்கி விட்டார்கள். சங்கப்பாடல்கள் எவ்விதம் அகம், புறம் பற்றிப்பாடினவோ அவ்விதமே இம்மெல்லிசைப்பாடல்களும் மானுடரின் அகம் , புறம் பற்றிப் பல் கோணங்களில் மானுட வாழ்வை, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதலின் சிறப்பை, காதலின் இழப்பையெல்லாம் அற்புதமான நெஞ்சையள்ளும் மொழிநடையில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் வைரமுத்து  போன்ற கவிஞர்கள் பலர் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது பாடல் வரிகளுக்கு உணர்வூட்டிய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் பங்களிப்பையும் புறக்கணித்து விட முடியாது.

காதலின் பிரிவுதுயரை வெளிப்படுத்தும் சிறப்பான பாடலிது. இப்பாடலின் சிறப்புக்கு மெல்லிசை மன்னர்களின் இசையும், சுசீலாவின் குரலும் ஏனைய முக்கிய காரணங்கள். கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு தன் குரலால் உயிரூட்டும் சுசீலாவின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் வைத்தெண்ணப்படும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். இப்பாடல்களெல்லாம் மானுடரின் பல்வேறு பருவங்களில் அவர்தம் மனதுக்கு ஆறுதளிப்பவை; இதமாகவிருப்பவை. இப்பாடலின் ‘யு டியூப்’  காணொளி ஒன்றுக்கான  எதிரிவினைகளில் முதியவர் ஒருவர் எழுதியிருந்த கருத்தொன்று என் நெஞ்சினைத் தொட்டது. அதனைக் கீழே பதிவு செய்கின்றேன். அத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்த மேலும் சில கருத்துகளையும் பதிவு செய்கின்றேன். இக்கருத்துகளெல்லாம் இவ்விதமான மெல்லிசைப்பாடல்கள் எவ்விதம் மானுட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துவன.

Continue Reading →