சு.சமுத்திரம் இலக்கியத் தளத்தில் பல்வேறு விமரிசனங்களை எழுப்பியவரும் பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானவரும் ஆவார். இவரது ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினம் சாகித்திய அகாதமி விருதைப் பெற்று உள்ளது. அரசு அலுவலகச் செயல்பாடுகளையும் அநீதியின் உச்சக் குரலையும் நீதியின் மெளனத்தையும் சாதியத்தின் பன்முகத்தையும் கருவாகக் கொண்டு புதினமாக உருப் பெற்று உள்ளது. சு.சமுத்திரம் இக்கருவிற்கு எங்ஙனம் உருவம் கொடுத்துள்ளார் என்பதை ஆய்வதாகக் கட்டுரை அமையப் பெறுகிறது.
தொடக்கம்
‘எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே – அவர்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே’
என்ற வரிகளை மெய்ப்பிக்கும் வகையிலேயே புதினத்தின் தொடக்கம் அமைந்து உள்ளது. முதன்மைப் பாத்திரமான சரவணனின் அலுவலகப் புறப்பாடே, புதினத்தின் முதல் காட்சி ஆகும். புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தராதவன். ஆனால் அகத் தோற்றத்தில் எவ்வித கறையும் படியாவண்ணம் தற்காத்துக் கொள்ளும் குணம் உள்ளவன் என்பதை தெளிவுபடுத்துவதாய்,
‘ உடை என்பது, உடம்பை உடைத்துக் காட்ட அல்ல. மறைத்துக் கொள்ளவே என்பதை சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம்.’ என்ற வரிகள் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் குணம், பண்பு அக அழகில் இருக்கிறதே தவிர புற அழகில் இல்லை என்பதை மனத்தில் ஆழப் பதியச் செய்து வளர்த்தது தாய் முத்தம்மாவும் இரண்டாம் தாயகத் திகழும் அண்ணி தங்கம்மாளுமே ஆவர். இப்பண்பு தங்கை வசந்தவிற்கான பணித் தேடலிலும் நிலை பெற்று இருக்கிறது. தன்னிடம் அதிகாரமும் பதவியும் இருந்த நிலையிலும, “ வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடலைஸ இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்ட முடியும். கூடவே நடக்க முடியாது ? ” என்று கூறுகிறான்.
சு.சமுத்திரம் தனது படைப்பின் முதன்மைப் பாத்திரத்தை, ‘ ஊருக்குத் தான் உபதேசம். தனக்கு அல்ல’ என்றா எண்ணம் கொண்டதாக இல்லாமல் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகப் படைத்துள்ளார்.
தலைப்பு
படைப்பாளர் புதினத்திற்கு மேலோட்டமாக இல்லாஅமல் குறியீடாகவும் கவிதையாகவும், ‘வேரில் பழுத்த பலா’ என்று தலைப்பிட்டு உள்ளார். கதையின் மையக் கருவைக் கடந்து முதன்மைப் பாத்திரத்தின் எண்ணப் போக்கை மனத்திற் கொண்டு தலைப்பு அமைந்துள்ளது. நம்முடைய தேவைகளை நிவிர்த்தி செய்யும் காரணிகள் காலடியில் கிடப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏழு கடல் ஏழு மலை தாண்டி மனம் தேடுவதே இயல்பாகும். அதைப் போன்று சரவணன், வாழ்க்கைத் துணையையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் திறமை கொண்ட ஆளுமையையும் எங்கோ தேடிக் கொண்டிருந்தான். ஆனால், “ அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய் விட்டதே? இப்போ, இவளை இவளையே. . . . . இவளை மட்டுமே . . . . நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே! இதுக்குப் பெயர் தான் காதலோ ” என்று சரவணன் எண்ணுவதாகப் புதினம் அமைந்துள்ளது.