ஆசிரியரின் என்னுரை!
இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின் முயற்சியில் குமரன் வெளியீடாக ‘வேலிகள்’ என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.
இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும். மகிந்த ராஜபக்சா அரசாங்க காலத்தில் அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிறது போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது. ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை. .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 % …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.
சில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் ‘பதிவுகள்’இணைய இதழில் வெளியாகின்றது.
அத்தியாயம் ஒன்று!
தீவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கிற அந்த சிறிய கடல்பரப்பு ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கனகனின் பூட்டன் காலம் அல்லது அதற்கு முந்தியதாக இருக்கலாம். அங்கே சிறிய துறையிருந்ததற்கு அடையாளமாக உள்ளே சென்ற மேடையொன்று அழிந்து சிதைந்து காணப்பட்டது. அவன் அப்பன் சிலவேளை “அப்படியே றோட்டு தீவுக்குச் சென்றது. இப்ப கடல் மூடிவிட்டது” என்று கதையளப்பான். ஒருவேளை அப்படி யிருக்குமோ என்று அவனும் நினைப்பதுண்டு. ஏனெனில் தார்ப்பருக்கைகளோடு கூடிய றோட்டு ஒன்று கடலுக்குள்ளே போயிருப்பதையும் யாரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் பாவிக்கிற இடமாகவே அது கனகாலமாக புளங்கி வருகிறது. அவர்கள் தங்குவதற்கான ஒரு நீண்ட வாடி ஒரு புறத்தில் அமைந்திருந்தது.முந்தி ஒலைக்கொட்டகையாக இருந்ததை ஒருமாதிரியாக அரச மானியத்தைப்பெற்று அஸ்பெஸ்டாஸ் கூரையோடு கூடிய சீமெந்துக் கட்டிடமாகக் கட்டியிருந்தார்கள். அந்தப்பகுதி பிரபல்யமாகவும், அவசியமானதாகவும் வரும் என்று எந்த மீனவனும் நினைத்திருக்கமாட்டான். சிறிய வள்ளத்தில் சென்று மீன்பிடித்து வருகிற அவர்களை புதிதாக ஒரு பிரச்சினை மூழ்கடிக்கப்போகிறது என்று மூக்குச் சாத்திரமா அவர்களுக்குத் தெரியும்.
கடல் பரப்பு அமைதியாக இருந்தது. மனதில் எரியும் கனலை அடக்க முடியாதவர்களாக அண்ணன் முருகேசு, கோபாலு, தில்லை, சப்பை போன்ற பிரதிநிதிகள் இடுப்பில் ஆயுதத்தைச் சொருகியிருந்த அந்த திக்குவாய்ப் பெடியனை சூழ்ந்திருந்தார்கள். கனகன், அன்ரன், நகுலன், நடேசு செட் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரமாக நின்றது.
“தம்பி, இது சரியில்லை. அவங்களை அந்தக் கரையிலிருந்து ஒடுறதுக்கு நீ ஒப்புதல் தந்தாய். இப்ப, ஒரு வள்ளம் இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருக்கிறது. உவங்களுக்கு சரியான பாடம் படிப்பிக்கேலும். நீ ஒப்புதல் தந்திருப்பதால் நாம எல்லாம் பொறுமையாக இருக்கிறம். அவங்களுக்கு நீ திட்டவட்டமாக வரையறை சொல்லி அதைக் கடைப்பிடிக்க வைக்க வேணும்” முருகேசின் கோபப்பேச்சு கனகனை சிறிது கிலி கொள்ள வைத்தது.
இவன் பயம் அறியாதவன். உயர் சாதிப்பெண்ணைக் காதலிச்சு, கூட்டிக்கொண்டு வந்து வாழ்கிறவன். நண்பர்கள் சிலருடன் எளிமையாக ஐயனார் கோவிலில் தாலி கட்டுறபோது அந்த சாதியினர் ஊருக்குள் அட்டகாசம் செய்யவந்தார்கள். திருக்கை வால், மண்டா, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு துணிவாக எதிர் கொண்டவர்கள் .ஆட்தொகை, ஆயுதம் பற்றி எல்லாம் கவலைப் படாத கூட்டம். இப்ப,இயக்கப் பெடியன் ஒருத்தனையே காட்டமாக எதிர் கொள்கிறார்கள். இவர்கள், சடாரெனச் சுட்டுத்தள்ளி விடுவார்கள். கனகனால் அவனை மறிக்க முடியுமா? தெரியவில்லை. எனவே, பயந்த மனதுடன் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
Continue Reading →