கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

அறிவித்தல்கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது  25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;,  சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்

முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000 (அமரர். திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (எழுத்தாளர் குறமகள்) ஞாபகார்த்தமாக)
மூன்றாவது பரிசு (இரண்டு எழுத்தாளர்களுக்கு) தலா இலங்கை ரூபாய்கள் –  20,000 (ஒன்று அமரர்களான திரு, திருமதி. தம்பியப்பா ஞாபகார்த்தமாகவும் மற்றையது அமரர். அதிபர் பொ. கனகசபாபதி (மகாஜனா) ஞாபகார்த்தமாகவும்)
ஏழு பாராட்டுப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000 (அமரர் அதிபர் அ. குருநாதபிள்ளை (நடேஸ்வரா) ஞாபகார்த்தமாக.)
ஐந்து ஊக்கப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 3000 ( அமரர் தாவளை இயற்றாலை கணபதிப்பிள்ளை கந்தசாமி ஆசாரியார்  ஞாபகார்த்தமாக.  )

போட்டிக்கான விதி முறைகள்:
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அச்சுப் பதிவில் 1200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர், ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப முடியும். போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். விதிமுறைகளுக்கு மீறிய கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

போட்டியில் பங்குபற்றும் எழுத்தாளர்கள் அனுப்பிவைக்கும் சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. போட்டிக்கான சிறுகதைகள் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக அவர்களது அரசியல் பொருளாதார சமூகம் சார்ந்த விடயங்களுக்குள் அமைவது வரவேற்கத்தக்கது.

Continue Reading →

மெல்பனில் 4.11.2018 அன்று நடைபெறவுள்ள 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

ஆஸ்திரேலித் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது.  சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இம்முறை மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில்  நடைபெறும் இவ்விழா குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய மாத இதழின் பிரதம ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அனுப்பியிருக்கும் தனது வாழ்த்துச்செய்தியில், ” 2001ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வருடம் மெல்பன் நகரில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ” என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது: 

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடும் விழாவாக இது நடைபெற்றுவருகிறது. அத்தோடு இலங்கையிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.2001ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது எழுத்தாளர் விழாவிலே நானும் எனது துணைவியாரும் பங்குபற்றினோம். அவ்விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழை அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சார்பில் வெளியிட்டுவைத்து உரையாற்றியமை மறக்கமுடியாத அனுபவமாகும். அத்தோடு அவ்விழாவில் இடம்பெற்ற கருத்தரங்குகளில் பங்குகொண்டதும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்ததும் இனிமையான நிகழ்வுகள். அதன்பின் 2004ஆம், 2006ஆம், 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விழாக்களிலும் நாம் இருவரும் பங்குபற்றினோம். 2004ஆம் ஆண்டு கன்பரா மாநிலத்தில்  நடைபெற்ற விழாவில் “ஞானம்” இதழின் அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழை வெளியிட்டது எமக்குப் பெருமைதரும் நிகழ்வாக அமைந்தது.

வருடம்தோறும் நடக்கும் இவ்விழாக்கள் மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இடம்பெற்று,  இப்பிரதேசங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குகொள்ள வகைசெய்வதும் சிறப்பான செயற்பாடாகும்.  இவ்வருட விழாவில் ஓவியக்கண்காட்சி, மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் ஒளிப்படக்காட்சி, நூல்கள், இதழ்கள்,பத்திரிகைகள் கண்காட்சி, நாவல் இலக்கியக் கருத்தரங்கு, கவிஞர்கள்அரங்கு, மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்மொழியை தமிழர்பண்பாட்டை தமிழர் தம் கலை இலக்கிய முயற்சிகளை புகலிட நாட்டில்  போற்றிப் பேணும் பெரும்பணியாக இவ்விழாக்கள் அமைகின்றன. ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைச் சிறப்பாக ஒழுங்குசெய்து சிறந்த முறையில் நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்க நிர்வாகிகள் யாபேரது பணிகளையும் பாராட்டுகிறேன். விழா சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.

Continue Reading →