அத்தியாயம் ஒன்று: காட்மாண்டு பள்ளத்தாக்கு
நேபாளம், இமயமலையின் தென் பகுதி அடிவாரத்தில் உள்ள நாடு. ஐம்பது மில்லியன் வருடங்கள் முன்பாக புவியின் வடகண்டம் தென்கண்டம் ஆகிய இரண்டும் கண்ட நகர்வினால் ஒன்றுடன் ஒன்று மோதியபோது ஏற்பட்ட அமுக்கத்தால் புவியின் மேற்பகுதி மேலெழுந்து 2900 கிலோ மீட்டர் நீளமான மலைத் தொடர் உருவாகியது.
அந்த மலைத்தொடரின் வடபகுதி திபேத் பீடபூமி. தென்பகுதியில் நேபாளம் மற்றும் இந்தியா உள்ளது. உலகத்தில் 14 மலைச்சிகரங்கள் 8000 மீட்டருக்கு மேற்பட்டவை அதில் எவரெஸ்ட் உட்பட 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.
விமானத்தில் பறக்கும்போது யன்னல் கண்ணாடியூடாக பார்க்கும்போது, பனிபடர்ந்த அந்தச் சிகரங்கள் தொடர்ச்சியாக பளிங்கில் செதுக்கி வைத்திருப்பதுபோல் அழகான காட்சியாக தென்படும். அந்த மலைத்தொடரின் மேலுள்ள பனிப்படலத்தில் உதயசூரியன் பட்டு கண்ணாடியின் மேல் வைத்த வைரமாலையாக ஒளிரும் காட்சி எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது .
புவியின் அசைவியக்கத்தால் உருவாகிய பிரதேசமானதால் இங்கு தொடர்ச்சியான கண்ட நகர்வு நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தச் சிகரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான தொடர் மாற்றத்தினால், இந்தப் பிரதேசத்தில் பூகம்பம் வருவது வழக்கம்.
நான் அங்கு சென்றபோது 2015 இல் ஏற்பட்ட பூகம்பத்தின் அழிவுகளை காட்மண்டு நகரத்தினருகிலேயே காணமுடிந்தது.
ஒரு காலத்தில் கடலாக இருந்த பிரதேசமென அறியப்பட்ட இந்நகரத்தில் வாழ்ந்த பல கடல் வாழ் உயிரினங்களது சுவடுகளை மியூசியங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. .அவுஸ்திரேலியாவில் இமய மலையில் இருந்து எடுத்த உப்பு பாளங்களில் இருந்து விளக்கு உருவாக்கப்படுகிறது. அவை காற்றின் மாசுகளை நீங்குமென அறிந்து ஒரு காலத்தில் கட்டிலருகே அத்தகைய ஒரு விளக்கை வைத்திருந்தேன் . இமய மலை, அதனது சிகரங்கள் பற்றிய படங்கள், நூல்கள் மற்றும் புனைவுகள் என்பன சிறு வயதிலிருந்தே என்னைப் பாதித்தவை. அறிந்தும் அறியாத ஒரு புதிராக மனதில் கூடு கட்டியிருந்தது. மற்றவர்களது கற்பனைகளின் மீது நான் கற்பனை செய்வதைவிட , நான் நேரில் காணும் காட்சியில் எனது எண்ணங்களை மற்றும் கற்பனைகளை மனதில் வரைபடமாக்க விரும்பியதால் அங்கு சென்றேன் . எனவே பல காலமாக எதிர்பார்த்திருந்த பயணம் இந்த நேபாளப் பயணம்.