என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் இருபத்தி ஐந்து
அந்தச்செய்தி ஊர் முழுதும் இரண்டு நிமிடங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. நாலாத்திசைகளிலிருந்தும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த காட்சியைத்தான் நீங்கள் காணவும் வேண்டுமே. சிலர் அவ்வாறு ஓடி வரும் போதே தங்களின் மேல் கோட்டை அணிந்தவாறே வேகமாக ஓடி வந்தனர். தட் தட் என்ற அவர்களின் காலடிச் சத்தம் ஏதோ வீரர்கள் போருக்கு அணிவகுத்து செல்லும்போது கேட்பது போலக் கேட்டது. விரைவிலேயே அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள். கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் “இது அவர்கள்தானா?” என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் “அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது.”
நாங்கள் அந்த வீடு இருந்த தெருவை அடைந்து வீட்டை நெருங்கும்போது, அந்த வீட்டின் முன் கூட்டம் அடைந்து கிடந்தது. மூன்று பெண்களும் கதவினருகே நின்று கொண்டிருந்தனர். மேரி ஜேன் சிவப்பு நிற முடியுடன் இருந்தாலும், அது பெரிய வித்தியாசத்தை காட்டாது மிகவும் அழகாகவே காணப்பட்டாள். அவள் முகத்திலும் கண்களிலும் தெய்வீக ஒளி குடிகொண்டிருந்தது. அவளுடைய உறவினர்கள் வந்துவிட்ட சந்தோசம் அவல் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ராஜா தன் கைகளை அவளுக்காக விரித்தார். அவளும் அதில் ஓடி வந்து ஐக்கியமானாள். பிளவுபட்ட உதடுடைய பெண் பிரபுவை நோக்கி ஓடி அவரை அன்போடு தழுவிக் கொண்டாள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும், அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள்.
ராஜா பிரபுவைத் தனியாக அழைத்துச் சென்றதை நான் கவனித்தேன். சுற்றிலும் அங்கே தேடிய ராஜா மூலையில் சவப்பெட்டி இரண்டு நாற்காலிகள் மீது வைத்திருப்பதை, கடைசியாகக் கண்டுகொண்டார். எனவே அவரும் பிரபுவும் கண்களுக்கு நேராகக் குறுக்கே ஒருவரின் தோள் மீது இன்னொருவர் கரத்தை வைத்து மிகவும் பதவிசாகவும், மெதுவாகவும் நடந்து சென்று சவப்பெட்டி முன் நின்றார்கள். அங்கிருந்த கூட்டம் அவர்கள் நிற்க வழிவிட்டது. அங்கே பேசிக்கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி அமைதியானார்கள். அங்கு கூடியிருந்தோர் அனைவரும் “உச்” என்று பரிதாப ஒலி எழுப்பினார்கள். அனைத்து ஆண்களும் தங்களின் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி தலையை மரியாதையை செலுத்தும் வண்ணமாக குனிந்து நின்றார்கள்.