“எங்கும் ஒலிக்கிறது காற்று” என்னும் நோக்குடன் வெளிவந்திருக்கிறது கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் 2011 கலை இலக்கிய மலர்.’ஒரு மக்களினத்தின் இருப்பு என்பது முதன் முதலாக அதன் பூர்வீகமான நிலம் சார்ந்தது. நிலத்தின் மீதிருந்தே மக்களினமும் மொழியும் கூட கட்டமைவாகின்றன. நிலத்தைத் தேடும் நெஞ்சுகளின் வலியை எப்படி விளக்கிட முடியும்? ஆனால் அத்தேடலின் மூர்த்தண்யத்தை நாம் அடையாளப்படுத்த முடியும். அதன் வீச்சை கோடி காட்ட முடியும். ‘எங்கும், ஒலிக்கிறது காற்று. எனது நிலம். எனது நிலம்’ என்ற கவிதை வரிகள் இந்த இரண்டினையும் தவறாமல் செய்திருப்பதாக நாம் நிச்சயமாக நம்புகின்றோம்’ என்று குறிப்பிடும் இதழின் தலையங்கம் ‘அதன் காரணமாகவே தொகுப்புத் தலைப்பாக ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்னும் வரியினைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.