2-ம் அத்தியாயம்: அழைப்பு
[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]
பல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின் வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.
“எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!