[எழுத்தாளர் விந்தன் (இயற்பெயர் : கோவிந்தன்) தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாதவர். அவரது ‘பாலும் பாவையும்’ நாவல் வெளிவந்த காலத்தில் முக்கிய கவனத்தினைப் பெற்றது. அவரது ‘பாலும் பாவையும்’ நாவலினை நான் முதன் முதலில் வாசித்தது என் மாணவப் பருவத்தில். அப்பொழுதுதான் ‘ராணிமுத்து’ என்னும் பெயரில் ஆதித்தனாரின் தினத்தந்தி நிறுவனம் மாதமொரு நாவலென நாடறிந்த எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிட்டு வந்தது. அவ்விதம் வெளியிட்டு வந்த முதல் பத்து அல்லது பன்னிரண்டு நாவல்களை அப்பா வாங்கியிருந்தார் – தமிழகத்திலிருந்து வெளிவரும் வார, மாத சஞ்சிகைகளான ‘விகடன்’, ‘கல்கி’, ‘கலைமகள்’, ‘அம்புலிமாமா’, ‘தினமணிக்கதிர்’, ‘மஞ்சரி’, ‘ராணி’ ஆகியவற்றுடன் ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற பத்திரிகைகளையும் அவர் வாங்கிக் கொண்டிருந்தார். ‘பொன்மலர்’ , ‘பால்கன்’ போன்ற காமிக்ஸ் சஞ்சிகைகள் அச்சமயத்தில் மாதாமாதம் மிகவும் அழகாக வெளிவந்து கொண்டிருந்தன. அத்துடன் ‘இந்திரஜால் காமிக்ஸ்’ வேறு. அவற்றையும் எங்களுக்காக அவர் வாங்கித் தந்தார். இவற்றையெல்லாம் நாட்டுச் சூழல் பின்னர் அழித்துவிட்டது. இது தவிர அவர் ஆங்கில நூல்களைக் கொண்ட சிறியதொரு நூலகத்தையும் வைத்திருந்தார். அவற்றில் ‘கிரகாம் கிறீன்’, ‘பி.ஜி.வூட் ஹவுஸ்’, ‘ருட்யார்ட் கிப்ளிங்’, ‘டால்ஸ்டாய்’, ‘இர்விங் ஸ்டோன்’, ‘தோமஸ் ஹார்டி’, ‘சேக்ஸ்பியர்’, டி.எச்.லாரன்ஸ், ‘ஏர்னஸ்ட் ஹெமிங்வே’, ஆர்.கே.நாராயணன் …. எனப் பலரின் நாவல்களும் அடங்கியிருந்தன. ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்த அவர் நன்கு எழுதும் ஆற்றல் மிக்கவராகவிருந்தும் வாசிப்புடன் நின்று விட்டார். அன்றைய காலகட்டத்தில் விகடன், தினமணிக்கதிரில் வெளிவந்த ஜெயகாந்தனின் எழுத்துகளை மிகவும் விரும்பிப் படிப்பார். – இவ்விதமாக ஆரம்பத்தில் வெளிவந்த ‘ராணிமுத்து’ நாவல்களிலொன்றுதான் விந்தனின் ‘பாலும் பாவையும்’. அப்பொழுதுதான் முதன் முறையாக விந்தனை நான் அறிந்து கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஆரம்பத்தில் வெளியான ராணிமுத்து நாவல்களில் சில இன்னும் ஞாபகத்திலுள்ளன: அறிஞர் அண்ணாவின் ‘பார்வது பி.ஏ’, ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’, அநுத்தமாவின் ‘கேட்டவரம்’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, மாயாவியின் ‘வாடாமலர்’, கலைஞரின் ‘வெள்ளிக்கிழமை’, அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’, சி.ஏ.பாலனின் ‘தூக்குமர நிழலில்’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார் கதைகள்’ … இதனைத் தொடர்ந்து விந்தனை நான் அறிந்து கொண்டது தினமணிக்கதிர் வாயிலாக. தினமணிக் கதிரில் அவர் ‘பாகவதர் கதை’, ‘கிட்டப்பாவின் கதை’ மற்றும் ‘விக்கிரமாதித்தன் கதைகள்’ ஆகிவற்றைத் தொடராக எழுதியிருந்தார். தமிழ் சினிமாத் துறையிலும் கால்பதித்த எழுத்தாள முன்னோடிகளில் விந்தனும் முக்கியமான ஒருவர். விந்தனின் பிறந்த தினம் செப்டெம்பர் 22. இச்சமயத்தில் அவரை ‘பதிவுகள்’ நினைவு கொள்கிறது. அதன் விளைவாக அவ்வப்போது இணையத்தில் வெளியான எழுத்தாளர் விந்தன் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. – ஆசிரியர், ‘பதிவுகள்’]
Continue Reading →