[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான ‘பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்’ என்னும் எனது கட்டுரையில் ‘தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.