[ தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய இக்கட்டுரை குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற அவர் பற்றிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அடிகோலுமொரு ஆரம்பக் கட்டுரையாக இதனைக் குறிப்பிடமுடியும். இக்கட்டுரை எழுத்தாளர் முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளிவரவிருக்கும் ‘இலக்கியப் பூக்கள் -2’ நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளியான ‘இலக்கியப் பூக்கள்’ தொகுப்பு நூலின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள நூலிது. – வ.ந.கி ] நான் யாழ் இந்துக் கல்லூரியிலும், வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருக்கின்றேன். இவற்றில் என் எழுத்தார்வம் தொடங்கியது வவுனியா மகா வித்தியாலய மாணவனாகவிருந்த சமயத்தில்தான். அப்பொழுதுதான் ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் என் ஆரம்பகால, சிறுவர் படைப்புகள் வெளிவந்தன. அப்பொழுதுதான் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததும் நிகழ்ந்தது. பின்னர் என் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தபொழுது அங்கே இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால் பதித்த எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சொக்கன் என அறியப்பட்ட சொக்கலிங்கம், தேவன் – யாழ்ப்பாணம் என்று அறியப்பட்ட மகாதேவன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். எனக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். என் எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த எழுத்தாளர்கள் எவரிடமும் மாணவனாகக் கல்வி கற்கவில்லையே என்பதுதான் அந்த வருத்தம். என எழுத்தார்வதிற்கு முழுக்க முழுக்கக் காரணமாகவிருந்தது என் வீட்டுச் சூழலே. அப்பாவின் வாசிக்கும் பழக்கமும், வீடு முழுக்க அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளும்தாம் என் எழுத்தார்வத்தின் பிரதானமான காரணங்கள். இருந்தாலும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாக அப்பொழுது கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான தேவன் – யாழ்ப்பாணம் அவர்களை அவ்வப்போது யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வீட்டில் கிடந்த பரணைத் தேடியபொழுது பழைய தினத்தந்தி பத்திரிகைப் பிரதிகள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், திப்புசுலதான் கோட்டை , தேவன் -யாழ்ப்பாணம் அவர்களால் புகழ்பெற்ற ஆங்கில செவ்விலக்கியங்களிலொன்றான Treasure Island நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த ‘மணிபல்லவம்’ நாவல் என பல படைப்புகள் கிடைத்தன. மேற்படி மணிபல்லவம் நாவலை அன்றைய காலகட்டத்தில் விரும்பி வாசித்துள்ளேன்.
Continue Reading →