குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. –
உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?