அஸ்வினி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநின்றார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதியார். தெருநாய்களையும் பூனைகளையும் புரந்து காக்க அயராது பாடுபட்டுவருகிறார் அஸ்வினி. இளம்பெண். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தும் தெருநாய்களையும் பூனைகளையும் பாதுகாத்து அவற்றின் பசியாற்றி பிணிதீர்க்கும் பரிவும் பிரியமும் கரிசனமும் அஸ்வினியிடம் கடலெனப் பரந்துகிடக்கின்றன! மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு! நாயும் பூனையும் அங்கே தோழர்களாக நட்புறவாடிக் கொண்டிருக்கும். தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள், வருவோர் போவோரின் கல்லடிக்காளாகின்றவை, நோய்வாய்ப்பட்டிருப்பவை, கருத்தரித்திருப்பவை, பிரசவித்திருப்பவை என உதவியும் சிகிச்சையும், ‘’ஸ்ட்ரெரிலைஸேஷனு’ம் தேவைப்படும் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றைத் தன் செலவில் உரிய மருத்துவமனைகளுக்குக் கூட்டிச்சென்றுவருவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள் பூனைகளின் பாதுகாப்புக்கு நம்மிடையே போதுமான அமைப்புகளோ விழிப்புணர்வோ இல்லை. அப்படியிருக்கும் அமைப்புகளும் இந்த வாயில்லா உயிர்களை அலட்சியமாக நடத்தும் அவலநிலையையே பரவலாகக் காணமுடிகிறது என்று வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. மழலையர்களின் ஆசிரியையாக அவருடைய சிறந்த பணியைப் பாராட்டி சமீபத்தில் அவருக்கு ‘இன்னர் வீல்’ என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.