ஒரு நிஷ்காம கர்மி

- வெங்கட் சாமிநாதன் -நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம்  படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை. மாலை ஆறு மணிக்குத் தான் அது விழித்தெழும். எழுந்ததும் சித்ரஹாரும் காந்தான் ஹிந்தி சீரியலும் தான் கதி என்றிருக்க வேண்டும். உலகம் முழுதும் அப்போது பெட்டியின் முன் கண்கொட்டாது அமர்ந்திருக்கும். ஆதலால் டேப் ரிகார்டர் தான் வேண்டும்  சமயத்தில் எல்லாம் உயிர்த் தெழும். கிட்டப்பாவிலிருந்து குமார் கந்தர்வா வரைக்கும் எனக்கு வேண்டும் பாட்டைப் பாடுவார்கள். அந்த 1988=ம் வருடத்தில் தான், ஏதோ ஒரு மாதம். ஒரு நாள். சங்கீத் நாடக் அகாடமியிலிருந்து நண்பர் கே.எஸ் ராஜேந்திரன் வந்திருந்தார். அந்நாட்களில் அவ்வப்போது வந்து என் தனிமையை மறக்கச் செய்த நண்பர்களில் அவரும் ஒருவர். அந்த பாபா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலில் சிகித்சை தொடங்கிய நாட்களிலிருந்து தொடக்கம். ஹாஸ்பிடல் தில்லியின் வடக்கு ஓரம்.. என் வீடு தில்லியின் தெற்கு ஓரம். விபத்துக்கு முந்திய காலங்களில் சினிமாவோ, நாடகமோ, நாட்டியமோ விழாக்களோ எதுவானாலும் மையம் கொள்வது அந்த மண்டி ஹௌஸ் சந்திப்பில் தான். சங்கீத நாடக் அகாடமியும் அங்கு தான். ஆக, என் மாலைப் பொழுதுகள் எப்படிக் கழியும் என்பது என் எல்லா நண்பர்களைப் போல அவருக்கும் தெரியும். வந்தவர் சங்கீத நாடக் என்னும் அகாடமியின் பத்திரிகைக்காக இந்திய நடனங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்றார். கால் முறிவானதால் நான் நீண்ட விடுமுறையில் இருந்தேன். படிக்க எழுத நிறைய நேரம் கிடைத்த ஒரு சௌகரியம். கால் எலும்பு முறிந்து நடக்க முடியாது போனாலும் ஒரு அசௌகரியத்தை ஈடு செய்ய ஒரு சௌகரியம் பிறந்து விடுகிறது. கையெழுத்துப் பிரதியாகக் கொடுத்தாலும் எடுத்துக்கொள்ள, தெரிந்தவர்கள் தயங்குவதில்லை. அது சாஹித்ய அகாடமியின் என்சைக்ளோப்பீடியாவோ, பத்திரிகைகளோ, அல்லது பேட்ரியட் லிங்க் போன்ற தனியார் பத்திரிக்கைகளோ, எதாக இருந்தாலும், அதில் இருந்தவர்கள் என் நிலை தெரிந்தவர்கள்.

Continue Reading →