‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து – எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.
கதைகள் பிறந்த கதை
ஆசிரியர் தனது பாட்டியினது இடுக்கண் பொருந்திய வாழ்க்கையையும் அவளது துணிவையும் பரிவையும் இங்கே எடுத்துச்சொல்கிறார். “ யார் உதவியையும் எதிர்பாராமல் தனது உழைப்பையும் ஆத்மபலத்தையுமே நம்பி வாழ்ந்த எங்கள் பாட்டி எமக்கெல்லாம் முன்னுதாரணம்தான்” என்கிறார். ஆசிரியர் எழுதியிருக்கும் இந்த முகவுரை இவருக்கும் இந்தப்பாட்டிக்கும் இடையேயிருந்த பாசப்பிணைப்பை நன்கு உணர்த்தி நிற்கிறது. இந்தப்பாசத்தின் வெளிப்பாடு இந்த நூலின் பெயரிலும் கதைகளிலும் துலங்குவதைக்காணலாம்.