‘எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல வாழ முடியவில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம். இது என்ன சாபக்கேடு ஐயா?’ – லிண்டன் வீதியில் வசிக்கும் இவரது பெயர் விபரங்களைக் குறித்துக் கொண்ட போதும் ‘இந்தக் காலம் அவ்வளவு நல்லதல்ல’ என்ற எச்சரிக்கைக் குறிப்போடு ‘அவற்றைப் பிரசுரிக்க வேண்டாம்’ என அவர் கேட்டுக் கொண்டார்.