கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஆவர். இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தாரபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்