முறையாகச் சங்கீதம் கற்று, தாளம் தப்பாமல் பாடாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஏதோ தனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடுகிறார் பார்வதி.அரைமணிநேரம் இதமாகத் தொட்டிலை ஆட்டியபின்னரே ஒன்றரை வயதே நிரம்பிய பேரன் இன்பன் அமைதியாகத் தூங்கத் தொடங்குகிறான். தன்னை மறந்து உறங்கும் பேரனின் அழகை இரசித்தவாறு சோபாவில் அமர்கிறார். ஐம்பத்தெட்டு வயதை அவர் கடந்திருந்தாலும் வீட்டுவேலைகளைச் சளைக்காமல் தான் ஒருவரே செய்துவிடும் சுறுசுறுப்பு அவர் வயதையும் மறைத்திருந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் நூல்கள் மற்றும் உள்ளுர் மாத,வார இதழ்களை வாசிக்கும் வழக்கத்திற்கும் மாறாகத் தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் மனைவியைக் கண்டு வியப்புறுகிறார் கணவர் ரெங்கன். வெளியே சென்று வீடு திரும்பிய அவர் குளித்து உடைமாற்றம் செய்து கொண்டு மீண்டும் வரவேற்பு அறையில் நுழைந்த அவர், மனைவியின் அருகிலுள்ள இருக்கையில் அமர்கிறார்.
குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான். பொழுது ஏற்கனவே விடிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு குழந்தை ஒவ்வொரு முறை அழுதபோதும் அப்பனின் நித்திரையும் குழம்பியது. அதனால் பொழுது விடியும் அசுகையே தெரியாமற் கிடந்திருக்கிறான். சிறியதொரு வாங்குபோல தொழிற்படும் மரக்கட்டையில் ஆறப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். அதையும் வெட்டி அடுப்புக்கு வைக்காதவரையிற் சரிதான். சேவலொன்று பொழுது விடிந்துவிட்ட செய்தியை இப்போதுதான் வந்து (அறை) கூவல் விடுத்தது. அப்பன் இருக்கும் கோலத்தை நான்கு கோணத்திலும் நின்று திரும்பித் திரும்பிப் பார்த்தது. “கவலைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு எழுந்திரு!” என இன்னொருமுறை கூவியது. சேவல் யாரோ ஒரு வீட்டுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அயலிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிச் சம்பளமில்லாத உத்தியோகம் செய்யும் சேவையுணர்வைப் பார்;த்தால் அப்பனுக்கும் ஓர் உற்சாகம் தோன்றியது. ஆனால் அந்தக் கணநேர உற்சாகத்தையும் அழுத்தும் எந்தப் பக்கம் போகலாம் என்று புரியாத கவலைகள். வீடு வாசலை விட்டு உடுத்த உடுப்போடு ஓடிவந்த கவலைகளை ஒருபக்கம் போட்டுவிடலாம். தனக்குச் சொந்தமில்லாத இருப்பிடத்தில் அகதி எனும் பட்டத்துடன் சீவிப்பது.. வயிற்றுப்பாட்டுக்கு அவ்வப்போது நிவாரணம் என்ற பெயரில் மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்பது.. அதையும் விட்டால் வேறு வழி இல்லாதிருப்பது போன்ற கவலைகளை எங்கே போடுவது?