குறுநாவல்: தங்ஙள் அமீர்

எழுத்தாளர் சீர்காழி தாஜ்புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர்  இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை  விபரிக்கும் ‘தங்ஙள் அமீர்’ வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ”தங்ஙள் அமீர்’. இக்குறுநாவலினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். –வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்

Continue Reading →