கலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது. 1989 – 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் ‘பொப்’ என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.