கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் என்ற பெயரை விட ஒரு நூற்றாண்டு தனிமை (One Hundred Years of Solitude )என்பதே அதிகமான பரிச்சயப்பட்ட பெயராகவே இருக்கிறது. 1967ல் வெளிவந்த இந்த நாவல் பல பதிப்புகள் கண்டு 30மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.ஆனால் இவரது அறியப்படாத தடை செய்யப்பட்ட நாவல் ஒன்றும் உண்டு. Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . உலக வாசகர்களின் கவனிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் ,நேசிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த லத்தின் அமெரிக்க, கொலம்பியா படைப்பாளி கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் நேற்று தனது 87வது வயதில் மறைந்தார். தனது எழுத்துக்களை மேஜிக்கல் ரியலிசம் என்னும் ஜால யதார்த்த பாரம்பர்ய கதை சொல்லும் முறையில் நாவலை படைத்துக் காட்டியவர். 1982களில் நோபல்பரிசினை பெற்ற மார்க்யுஸ் காலனிய ஆட்சிக்கால குரூரங்களைஎழுதிப் பார்த்தவர். தனது மூதாதைகளின் கதை சொல்லல் முறையினையும் மார்க்வெஸ் தனது எழுத்தின் உயிரோட்டத்தில் இணைத்தவர். துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த மார்க்யுஸ் கதையற்ற எழுத்துக்களில் தனது பயணத்தை துவக்கி கதையுலகிற்குள் நுழைந்தார். 1967 களில் வெளிவந்த ஒரு நூற்றாண்டு தனிமை(One Hundred Years of Solitude) நாவல் படைப்புலகின் புது மாதிரியான மேஜிக்கல் ரியலிசத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்வை புனைவின் ரூபத்தில் புதிர்மைகளோடு படைப்பாக்கம் செய்த அவரது உத்தி பிரபலமானது.ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பிறகு கவி சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் இந் நாவல் சென்ற ஆண்டு தமிழுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பும் மார்க்யுஸின் மொழிபெயர்ப்புகள் தமிழின் மிகத் தீவிர எழுத்தாளர்களால் அறிமுகம் ஆகியிருந்தது.