[வில்லியம் ஷேக்ஸ்பியர் ஞானஸ்நானம் பெற்ற தினம் ஏப்ரில் 26, 1564. அவர் பிறந்த தினம் ஏப்ரில் 23, 1564 என்று கருதப்படுகின்றது. அவரது மறைந்த தினமும் ஏப்ரில் 23, 1616. – பதிவுகள்-]
முன்னுரை
ஆங்கிலமொழியில் நன்றே எழுதிப் புகழீட்டிய வில்லியம் ஷேக்ஸ்பியர், என் இலக்கிய நாயகர்களின் முதல் வரிசையில் வீற்று இருப்பவர். அவர் இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணியின் காலத்தவர். அதாவது இன்றிருந்து 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 52 வருடங்கள் வாழ்ந்து இலக்கியப் படைப்பினையே தன் தொழிலாகச் செய்து பணத்துடனும் புகழுடனும் இறந்தவர். தன் 52 வருட வாழ்க்கையிலே 39-பிரபலமான நாடகங்களையும், 154-சொனெற்-ரகக் கவிதைகள், அத்துடன் ஆறு சங்கீதத்துக்கு உரிய சொனெற்றுக்களையும், ஐந்து நீள்-கவிதைக் கதைகளையும் எழுதியிருக்கிறார்.
இன்று பொதுமக்கள் ஆங்கிலத்தில் சாதாரணமாகச் சம்பாசிக்கும் போது கூட, ஷேக்ஸ்பியரின் பல எழுத்து ஓவியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஓரிரண்டு சொற் தொடர்களையாவது பாவிக்காமல் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கூடப் பேச முடியாது, என்று சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் ஆங்கில மொழியை மேன் மேலும் தளைக்கவும் உதவியுள்ளன என்பர். எனவே இவர் ஆங்கிலத்தில் ஒரு முக்கியமான நாடகக் கவி எனக் கருதப்படுபவர். தன் மொழிக்குச் சிறப்பூட்டிய ஓர் இலக்கிய மேதை.