நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம். நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக்களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.
என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.
அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவதுபோலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக்கியை விடுவித்துத் திறப்பதற்கு முற்படும்போதே, அதைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுளைந்தார்கள்.. பிரியசாந்தவும் சந்திரசேனவும். நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டுவீச்சு தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, ‘இலங்கைக்குப் போகவேண்டும்.. அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்..’ என நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடைவலயமாக்கப்பட்டிருக்கும் கட்டம் இது. லிபியாவிலிருந்து நினைத்தவுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர்களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும் எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.
Continue Reading →