“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” – கண்ணதாசன்
கும்மிப்பாடல்கள்,நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள்,நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள்,மாலையில்,இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை;இசையை; கலையை; அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக்குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள். அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன். எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள்.அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன். எங்களூர் ஏகலைவன் உறவினர்,கவிதை நண்பர் திரு பெ.அண்ணாமலை யார் பாடுறது? இளங்கோவா? என்று கேட்டது காதில் விழுந்தது. அடுத்த நொடியே நல்லாயிருக்கே என்றார். அதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற முதல் பாராட்டு. அது இன்னும் என்னோடு இருக்கிறது.
கவிதை நயம் மற்றும் கவிதைத்தொகுப்பு பற்றி….
கவிதையை நயப்பதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். கவிதையிலுள்ள உவமை, உருவகம், குறியீடு, கற்பனை வளம், சொல் வளம் இவையெல்லாவற்றையும் அறிந்து , உணர்ந்து, சுவைப்பதற்குக் கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமெ சாத்தியம். எனவேதான் கவிதைகளைத் தொகுப்பவர்களுக்குக் கவிதையைச் சுவைக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பதென்ன? கவித்துவமில்லாத கவிதைகளெல்லாவற்றையுயும் தொகுத்திருப்பார்கள். இதற்குக் காரணம் இவ்விதமாகக் கவிதைகளைத் தொகுப்பவர்கள், தொகுக்கப்படும் கவிதைகளின் நயத்தை அறிந்து , சுவைக்கத்தெரியாதவர்களாக இருப்பதுதான்..
இவ்விதம் தொகுக்கப்படும் கவிதைத்தொகுப்புகளை அவர்களது குழுவினருக்கு ஆதரவாக இயங்கும் திறனாய்வுப் பெருந்தகைகளை அல்லது தமிழகத்து இலக்கிய ஆளுமைகளை அழைத்துச் சிறப்பித்து நூல்களை வெளியிட்டு வைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்பட்ட ஆளுமைகளும் தம் பங்குக்கு ஏதாவது கூறி வைப்பார்கள். அத்துடன் சரி. ஒரு சில மாதங்களில் மறக்கடிக்கப்பட்ட தொகுப்புகளாக அவை மாறிவிடும்.