உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு. இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள்.
‘ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!”
எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர்களுக்கு இது விளையாட்டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒரு நாள் வீதி ஓரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கிவந்தான். ‘அப்பா நல்ல வடிவான குட்டிப் பாம்பு. பார்த்தீங்களா?” என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப் பதம் பார்க்கவும் இல்லை.)