[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதி. – பதிவுகள். ]
எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு!
எனக்குப் பொதுவாக எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது பிடிக்கும். அவற்றில் அவர்களின் பல்வேறுபட்ட ஆளுமை இயல்புகள், வாழ்க்கைப் போராட்டங்கள், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதங்கள் எனப் பல்வேறு பட்ட விடயங்களை அறிந்து கொள்ள முடியுமென்பது முக்கிய காரணம். அண்மையில் இவ்விதமான பல்வேறு ஆளுமைகள் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இவர்கள் இருந்தார்கள்’ என்னும் , நற்றிணை பதிப்பாக வெளிவந்த நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் எழுத்தாளர் சு. சமுத்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த தகவலொன்று நெஞ்சினை ஓங்கி அறைந்தது. அது:
“..சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம் பெருகக்கிடந்திருக்கின்றார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டெ சென்று சேர்த்திருக்கின்றார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என எண்ணி அவசியமான அறுவைச் சிகிச்சை செய்யாமல் இரண்டரை மணி நேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கின்றார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்.”