(இ)ரயில்களே தோற்றுவிடுமாப்போல் வளைந்து நெளிந்து நீண்டு புகும், புழுதி அள்ளி எறியும் ஒற்றையடித்தெருக்களுக்குள்ளும்… அதன் கூடவே நிரைநிரையாக அணிவகுத்து காற்றுக்குத்தலைகோதும் பனைமரக்காடுகளுக்குள்ளும்… உச்சி வெயில் நேரம் தாகம் தீர்க்கும் தருக்கள் சகிதம், கிடுகு, தென்னைஓலை, பனைஓலை, பனைமட்டை, வாழைச்சருகு, பூவரசு, ஆமணக்கு, கிளிசெறியா, கிளுவை, கள்ளி, அளம்பல் என்று வேலிகளால் வகுக்கப்பட்ட நிலபுலங்களுக்குள்ளும்… சொக்கிக்கிடந்தவாறு, சதா சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் நீரின் (நி)சப்தத்துக்குக்கூட ஊறுவிளையாமல் நாழிகைப்பொழுதுகளும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் கிராமிய வாழ்வியலின் ஒரு பக்க அழகுப்பதிவு!
எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி வருவதும், மலர்ந்து விட்டால் தேனை அருந்தி விட்டு விலகிச் செல்வதும் தேனிக்குக் கைவந்த கலையாக இருக்கலாம்.
இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கின்றேன் ஆனால் இப்படியொரு ஈர்ப்பு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சினிமாப் படங்களில் சில நடிகைகளைப் பார்க்கும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சஞ்சலப்படுவது உண்மைதான். நிழற் காட்சிபோல மறுகணம் அது மாயமாய் மறைந்துவிடும். ஆனால் இது என்ன மாயம், இன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
கனவுலகில் இருந்து நான் மீண்ட போது அவள் மறைந்து போயிருந்தாள். அவளை இன்னுமொரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனசு ஏங்கியது. இந்தக் கூட்டத்தில் அவளை எங்கே தேடுவது? தென்றலாய் வந்தவள் சட்டென்று என் மனதில் சூறாவளியை ஏன் ஏற்படுத்தினாள்? என் தவிப்பு என்னவென்று அவளுக்குப் புரியப் போவதில்லை, ஆனாலும் மனசு எதற்கோ தவித்தது.