அண்மையில் ‘வல்லினம்’ இணையத்தளத்தில் கருணாகரனின் ‘ இலங்கையின் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையினை வாசித்தேன். கட்டுரையின் ஓரிடத்தில் கட்டுரையாளர் ‘மணிக்கொடியில் புதுமைப்பித்தனைப்போல மறுமலர்ச்சியில் அ.செ.மு இருந்தார். புதுமைப்பித்தன் எழுத்தின் உச்சத்தைத் தொட்டார். அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். இதனால் தன்னை முழுமையாக இலக்கிய எழுத்தில் ஈடுபடுத்திக்கொள்வதற்கே அ.செ..முவினால் முடியாமற் போய்விட்டது. மறுமலர்ச்சி முக்கியமான பல படைப்பாளிகளை உருவாக்கியது’ என்று குறிப்பிடுவது ஆச்சரியத்தைத்தருகின்றது. அக்கூற்று அ.செ.மு பற்றிய போதிய ஆய்வின்றி கூறப்பட்ட கூற்றாகவே எனக்குத்தென்படுகின்றது.
அ.செ.மு புனைகதையில் சாதனை புரிந்தவர். அவரது சிறுகதைகள் முக்கியமானவை. அவரது படைப்புகள் பல இன்னும் நூலுருப்பெறவில்லையென்பதற்காக அவரது பங்களிப்பை மறந்துவிடவோ அல்லது மறைத்து விடவோ முடியாது. ஒரு படைப்பாளியின் படைப்புகளின் எண்ணிகையை மட்டும் வைத்து அவரது சாதனையையோ அல்லது பங்களிப்பினையோ மதிப்பிடுவதில்லை. அ.செ.மு பத்திரிகையாளராக இருந்த அதே சமயம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் புனைகதைத்துறையிலும் காத்திரமாகக் கால் பதித்தவர். அவரது சிறுகதைத்தொகுதியான ‘மனித மாடு’ (யாழ் இலக்கியக் கலாச்சாரபேரவையினால் வெளியிடப்பட்டது) நூலுக்கு விடுதலைப்புலிகளின் கலைப்பண்பாட்டுக்கழகத்தினர் பணமுடிப்பு வழங்கிக்கெளரவித்ததாக அவர்கள் வெளியிட்ட எரிமலை சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன்.