பத்திரிக்கைச் செய்தி : நாவல் ஆய்வரங்கம்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ என்ற புதிய நாவல் ஆய்வரங்கம் சனியன்று மாலை மகாகவி வித்யாலயா, இந்திராநகர், icic வங்கி அருகில்அவினாசி சாலையில் வி.மணி, மாநிலத்தலைவர் , அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை மாநில பொதுச்செயலாளர் தேனி விசாகன் பேசுகையில் “ சமூகப் போராளிகள் அவர்கள் வாழும் கால்த்திலேயே அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் . அவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக் இருந்தாலும், தன்னார்வத் தொண்டர்களாக இருந்தாலும், சமூகப்பணியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகத்தில் பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருப்பது துயரமானது. சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போராளிகளும், செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் “ என்றார்.
சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை இந்த ”புத்துமண் “ நாவல் சொல்கிறது. இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 120 விலை ரூ 100
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஏற்புரையில் : நவீன முதலீட்டாளர்கள், கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களை அக்கறையுடன் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். முதலீட்டாளர்கள், .கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரை, மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக கார்ப்பரேட் சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும் என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை படைப்புகள் மூலம் வலியுறுத்துகிறோம்.. முதலீட்டாளர்கள், கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.அதைக் கடைபிடித்தால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியும் “