1. மௌனம்
மழையை ஏந்திய இலையிலிருந்து
மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று
எண்ணெய்வாசனை கமழும் சமையலறை தயாராகிறது
நாவின் மொட்டுக்களைத்தூண்டும்
செம்மண் தோட்டத்துக் கத்தரி
கிண்ணங்களில் அடங்குகின்றது
முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை
நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்
களி நடனம் மிளிர்கிறது
இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்
உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது
அர்த்தநாரி இழந்துபோக
சிவனின் தாண்டவம்
சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்
படிந்த நிழல்
சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது
விழி நோக்கி
உன் பேச்சு அதிகமென்று
வேலியிட்ட மணித்துளிகளில்
பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்
ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது
மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது
சிந்தும் இரத்தத்துளிகளுடன்.