“எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கேன வாழாத் தலைவன்!” என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான்.
குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்துவிட்டபடியே எப்போதும் வலம் வருவான். எதிரில் வரும் பெண்களெல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. நினைப்பதோடு நின்று விடமால் நண்பர்களுக்கெல்லாம் அதையே சொல்லித் திரிவான். சிலவேளைகளில் நெஞ்சை நிமித்தியபடி எவருக்கும் அஞ்சாதவன்போல் மிதப்போடு அலைவான். ஆனால் எதுவுமே உருப்படியாக அவன் செய்ததே இல்லை.