– தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான ‘மழைக்கால இரவு’ இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. இந்தச் சிறுகதையில் எம்மைக் கவர்ந்த முக்கியமான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக்கூறுவோம்: நெஞ்சையள்ளும் எழுத்து நடை, போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை விரிவாக அதே சமயம் அவர்களது இயல்பான அந்நேரத்து உணர்வுகளுடன் எந்தவிதப்பிரச்சார வாடையுமற்று விபரித்திருத்தல், இக்கதையில் தெரியும் மானுட நேயப்பண்பு (குறிப்பாகக்கீழுள்ள பகுதியைச் சுட்டிக்காட்டலாம்: ‘அன்றையபோரில் ஈடுபட்டு மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது. ‘ஒருவருக்கொருவர் முரண்பட்டு அழிந்து போனவர்களின் உடல்களைப்பற்றிய கதை சொல்லியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பகுதி. இக்கதையின் முக்கியமானதோர் அம்சமாக இதனைக் கருதலாம்), மற்றும் போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தல். தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். – பதிவுகள் –
அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.
அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.