‘கூலித்தமிழ்’ என்ற நூல் வெறுமனே மலையகத்தவரின் அவல வரலாற்றைச் சொல்லுகின்ற நூல் அன்று. அது, கற்க வழியற்றுக் கிடந்த தோட்டத் தமிழரின் போர்க்குணத்தையும், இலக்கியப்படைப்புக்களையும் புலப்படுத்துகின்ற நூல். தோட்டத் தொழிலாளர்கள் அவலம் பற்றி ஈழத் தமிழர்களும் கேட்டும் கேளாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். அவர்களும் இணைந்து குரல்கொடுத்துச் சகோதரத்தமிழரின் அவலத்தைத் தணித்திருக்கலாம். அன்றைய ஈழத்தமிழரின் செயலுக்காக நான் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறேன். ஈழத்தமிழர் அசட்டையாக இருந்தார்கள் என்றால், தமிழ்நாட்டுத் தமிழரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். தமிழகத்திலிருந்து புதுவாழ்வு தேடிவந்த சகோதரா;கள் இலங்கை மலைநாட்டில் அடிமைகளாக வாழ்ந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களும் மவுனிகளாகவே இருந்துவிட்டார்கள். அவர்களையும் மன்னிக்க முடியவில்லை. மலையகத் தமிழரின் பிறந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது; புகுந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது என்பது சோகமான உண்மை” என்று தமிழறிஞரும், வழக்கறிஞருமான செ. சிறிக்கந்தராஜா லண்டன் ‘சொறாஸ்ட்ரியன்’ மண்டபத்தில், சென்ற ஏப்ரல் 25ஆம் திகதி மு.நித்தியானந்தனின் நூல்வெளியீட்டில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்திருந்தார்.