உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.
யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.
குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது. இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05) என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.
அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.