வாசிப்பும், யோசிப்பும் 131: ராஜாஜி ராஜகோபாலனின் ‘குதிரையில்லாத ராஜகுமாரன்’ பற்றிச்சில குறிப்புகள்…

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான ‘குதிரையில்லாத ராஜகுமாரன்’  படித்தேன். இன்னும் முடிக்கவில்லை. ஆனால் தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன். தொகுப்பினை முழுமையாகப்படித்த பின்னர் என் முழுமையான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். நான் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் என் கருத்துகளைப் பற்றிப்பின்வருமாறு கூறுவேன்:

நான் வாசித்த கதைகளில்  மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது ‘பத்தியம்’ மற்றும் ‘கடவுளும் கோபாலபிள்ளையும்’ ஆகிய கதைகளைத்தாம். ‘பத்தியம்’  ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை ‘மேனாட்டு’ வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு ‘மெடிக்கல் ரிபோர்ட்’ காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ‘ சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்” என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ “அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ” என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் ‘பத்தியம்’ அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை ‘டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்’ என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.

Continue Reading →